மாணவிகள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாக அவர்களது நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் உலா வந்தன.

கொரோனாவின் தாக்கம் முதல் அலையை விட இரண்டாவது அலையில் மிகக்கடுமையாக இருப்பதாலும், குழந்தைகளையும் பாதிப்பதாலும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து, நீட் தேர்வு, பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கேள்விகளுக்கு தந்தி டிவியின் பிரத்யேக பேட்டி ஒன்றில் பதிலளித்திருந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அதில், “மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை மட்டுமே நியமனம் செய்ய நடவடிக்கை” என்று அவர் கூறியதாக தந்தி டிவி தனது சமூக வலைத்தளத்தில் நியூஸ் கார்டு ஒன்றினை வெளியிட்டிருந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பிலும் பெரும் சர்ச்சை எழுந்தது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
மாணவிகள் மட்டுமே படிக்கும் மகளிர் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை மட்டும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய செய்தி குறித்து தந்தி டிவியின் சமூக வலைத்தளத்தில் ஆராய்ந்தோம்.

தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்திருந்த முழு பேட்டியையும் ஆராய்ந்தபோது அதில் அனைத்து பள்ளிகளிலும் பாலியல் புகார்களை விசாரிக்க ஆசிரியைகள் மற்றும் பள்ளியின் அதிகாரக்குழுவினர் இடம் பெறும் வகையில் விசாகா கமிட்டி போன்ற ஒன்று அமைக்க அறிவுறுத்தியிருக்கிறோம் என்பதாக அவர் கூறியிருக்கிறார்.
அதேபோன்று, முன்னதாக வெளியான தந்தி டிவியின் இப்பேட்டி குறித்த வீடியோ ஒன்றில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க பள்ளிகளில்“மேல்மட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தலைமையில் விசாரணைக்குழுக்கள் அமைக்க நடவடிக்கை” என்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவிகள் படிக்கும் பள்ளியில் பெருமளவில் ஆசிரியைகள் மட்டுமே நியமிக்கப்படுவது இதற்கான தீர்வாக இருக்கும்; அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் சபீதா உறுதியளித்தார்; அதுகுறித்த உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்று பேட்டியாளர் எழுப்பிய கேள்விக்கு, “இந்த கருத்து நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். அதுவும் நல்ல விஷயமாகத்தான் தெரிகிறது. இதுகுறித்து முதன்மைச் செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறேன்” என்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், குறிப்பிட்ட அந்த கருத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாகத் தெரிவித்தது போன்று தந்தி டிவியின் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே குறிப்பிட்ட சர்ச்சை சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
மேலும், இது குறித்து செய்தித்தளம் ஒன்றிடம் “ஆசிரியைகளை நியமிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. பரிந்துரைகள் வந்திருப்பதால் ஆலோசனைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
மாணவிகள் மட்டுமே படிக்கும் மகளிர் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை மட்டும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய செய்தி தவறான புரிதலால் வெளியாகியுள்ளது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading/Partly false
Our Sources:
Thanthi tv: https://www.youtube.com/watch?v=g0kffMmcA2I
Twitter: https://twitter.com/abpnadu/status/1401855702772043778?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)