Fact Check
ஹவுஸ் ஓனர்,ஒத்த செருப்பு திரைப்படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதா?
தேசிய விருது அறிவிக்கப்பட்டதாக ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் திரைப்படங்களுக்கான வாழ்த்துகள் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபனின் படைப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம், ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7. இந்த திரைப்படம், ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை முன்வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு கலைப்பட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. அதே போன்று, நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ என்னும் திரைப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பிற்கு உள்ளானது.
Fact check/verification:
இந்த இரண்டு திரைப்படங்களுக்கும், மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும், இந்திய மொழி சார்ந்த படங்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இதனை பல்வேறு ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன. வலைத்தளங்களிலும் இந்த செய்தி வைரலாக பரவியது.
இந்நிலையில், இச்செய்தியின் உண்மை தன்மை குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.
உண்மையும், பின்னணியும்:
இவ்விரண்டு திரைப்படங்களுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளதாக பரவி வருகின்ற செய்திகளை மற்ற ஊடகங்களில் ஆராய்ந்தோம். சில காட்சி ஊடகங்கள் இதனை பொதுவான வார்த்தைகளில் மத்திய அரசு விருது அறிவிப்பு என்று செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், ஒத்த செருப்பு திரைப்பட இயக்குனரான திரு.பார்த்திபன் அவர்கள் இதுகுறித்த விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை நாம் கண்டறிந்தோம். அதன்படி, ஏற்கனவே இந்தியன் பனோரமா தேர்ந்தெடுத்த படங்கள் குறித்து மத்திய அரசு தற்போது செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை ‘தேசிய விருது’ என்று ஊடகங்கள் தவறான புரிதலுடன் செய்தி வெளியிட்டுருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த விருது குறித்த தெளிவான அறிவிப்பு ஒன்றினைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Conclusion
இந்த ஆய்வின் அடிப்படையில், மேற்கூறிய இரண்டு திரைப்படங்களும் இந்தியன் பனோரமா திரைப்பட வரிசையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், தேசிய விருது என்பதும், இந்தியன் பனோரமா என்பதும் வேறு வேறானது என்பதை அரசின் Directorate of film festival இணையதளம் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
எனவே, ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் திரைப்படங்களுக்கு மத்திய அரசின் பனோரமா விருதுகளே அறிவிக்கப்பட்டுள்ளது; தேசிய விருது இல்லை என்பது நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் வாசகர்களுக்கு இதன் மூலமாக விளக்கமளிக்கப்படுகிறது.
Result: Misinterpreted
Our sources:
Twitter (Parthiban): https://twitter.com/rparthiepan/status/1318840301130108928?s=20
Twitter (Lakshmi Ramakrishnan): https://twitter.com/LakshmyRamki/status/1319149148357062657?s=20
DFF: https://www.dff.gov.in/Default.aspx
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)