Fact Check
சுதந்திர தின முதலமைச்சர் உரையில் ஜனவரி 15 என்று குறிப்பிட்டாரா மு.க.ஸ்டாலின்?
சுதந்திர தின முதலமைச்சர் உரையின்போது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தவறுதலாக ஜனவரி 15 என்று குறிப்பிட்டார் என்பதாக தகவல் ஒன்று வைரலாகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றினார்.
இந்நிலையில், தொடர்ந்து அவர் ஆற்றிய முதலமைச்சர் உரையில் ஜனவரி 15 என்று தேதியைத் தவறுதலாகக் குறிப்பிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாகிறது.
“ஆனால் அந்த வீடியோவில் ஸ்டாலின் ‘ஜனவரி 15 சுதந்திர நாள்’ என்று சொல்லிவிட்டு 2 செகண்டுகள் ‘ஏதோ இடிக்குதே?’ என யோசித்தார் பாருங்கள்… அது தான் அவரின் நினைவாற்றல்; ஆளுமை; ராஜதந்திரம்; நிர்வாகத்திறன்; etcetera, etcetera.
உலகமே வியந்து நோக்கும் ஒரு முதலமைச்சராய் அவர் திகழ்வதில் வியப்பேதுமில்லை!” என்கிற தகவலுடன் அப்புகைப்படம் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
சுதந்திர தினத்தின் போது முதலமைச்சர் ஆற்றும் உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 15 என்று குறிப்பிட்டார் என்பதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதனை ஆய்வு செய்தோம்.

குறிப்பிட்ட அந்த வைரல் புகைப்படத்தில் ஓரத்தில் நெல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நெல்லை என்பது திருநெல்வேலியைக் குறிக்கும் சொல்லாகும்.
எனவே, திருநெல்வேலியில் நடைபெற்ற ஏதோ ஒரு நிகழ்வில் மு.க.ஸ்டாலின் உரையாற்றியிருப்பது, குறிப்பிட்ட நிகழ்வுக்கும் சுதந்திர தினத்திற்கும் தொடர்பு இல்லை என்பது நமக்கு உறுதியானது.

தொடர்ந்து, தந்தி டிவியின் லோகோ குறிப்பிட்ட வைரல் செய்தி புகைப்படத்தில் இடம்பெற்றிருந்ததால் அது தொடர்பாக தந்தி டிவியின் யூடியூப் பக்கத்தில் கீவேர்டுகள் மூலமாக தேடினோம்.
அப்போது, தந்தி டிவியில் கடந்த நவம்பர் 21, 2017 ஆம் ஆண்டு அவர் நெல்லையில் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது தவறுதலாக இரண்டு தினங்களையுமே ஜனவரி 25, டிசம்பர் 25 என்று குறிப்பிட்டார். உடனடியாக தவறை உணர்ந்து மேடையிலேயே அதனை திருத்திக் கொண்டார்.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் இருந்து கட் செய்யப்பட்ட புகைப்படத்தையே தற்போது முதல்வர் உரையில் மு.க.ஸ்டாலின் தவறுதலாக தேதிகளைக் குறிப்பிட்டார் என்பதாக பரப்பி வருகின்றனர்.
Conclusion:
சுதந்திர தினத்தின் போது முதலமைச்சர் ஆற்றும் உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர நாள் ஜனவரி 15 என்று குறிப்பிட்டார் என்பதாகப் பரவும் தகவல் தவறானது என்றும், குறிப்பிட்ட வீடியோ 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது; சுதந்திர தின விழாவிற்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Source:
Thanthi Tv: https://www.youtube.com/watch?v=n8pAlLZQ7TA
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)