Fact Check
இந்திய வம்சாவளி இளைஞரை அரசியல் ஆலோசகராக நியமிக்கிறாரா ஜோ பிடன்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகமதுகான் என்ற இளைஞரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கும் ஜோ பிடன், தனது அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளார் என்கிற தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Fact check/ Verification:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கிறார் ஜோ பிடன். இந்நிலையில், தன்னுடைய நிர்வாகப் பணிகளுக்கான குழுவை அவர் அமைக்கும் முயற்சியைத் துவங்கியுள்ளார்.
அதன் முதல் படியாக, வெள்ளை மாளிகை பணியாளர்கள் குழுவின் தலைவராக ரான் கிளைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், அகமதுகான் என்கிற இந்திய வம்சாவளி இளைஞருடன் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் பிடன் நிற்கும் புகைப்படம் ஒன்று, அகமதுகான் அவர்கள் ஜோ பிடனின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற வாழ்த்துச் செய்தியுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
அகமதுகான் பற்றி பரவுகின்ற வைரல் பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தினை ரிவர்ஸ் சர்ச் மூலமாக ஆராய்ந்தோம்.
அவ்வாறு ஆராய்ந்தபோது, 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவிடப்பட்டிருந்த ட்விட்டர் பதிவொன்று நமக்குக் கிடைத்தது. அதில், அம்ஜத் உல்லா கான் என்பவர், ஜோ பிடனின் வரவேற்பு நிகழ்ச்சியில் அகமதுகான் கலந்து கொண்டார் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ரிவர்ஸ் சர்ச் தேடுதலில் இப்புகைப்படம் குறித்து ‘தி குவிண்ட்’ நடத்திய உண்மையறியும் சோதனைக் கட்டுரையையும் நாம் கண்டறிந்தோம். அதில், அகமதுகான் 2015ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் அகமதுகான், கடந்த 2016ம் ஆண்டு ஜோ பிடன் அமைத்திருந்த ‘டிராஃப்ட் பிடன் 2016’ அரசியல் குழுவின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்தவர்.
மேலும், மேற்கண்ட புகைப்படங்களும் சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல; கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்பதும் நமக்கு தெரிய வருகிறது.இதுகுறித்த செய்தியை ஆல்ட் நியூஸ் இணையதளமும் வெளியிட்டுள்ளது.
Conclusion:
எனவே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகமதுகான் என்கிற இளைஞர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பிடனின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்படவில்லை என்பதையும், சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் 2015ம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதையும் நியூஸ்செக்கர் தமிழின் விரிவான ஆய்வின் மூலம் விளக்கியுள்ளோம்.
Result: Misleading/Partly false
our sources:
Twitter: https://twitter.com/amjedmbt/status/676755856369651713?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)