Fact Check
ராசாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்று வதந்தி
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.

Fact Check/Verification
ராசாத்தி அம்மாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கனிமொழி.
ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரப்பி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் செந்தாமரை மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற பலத் தமிழ் படங்களில் நடித்தவர். இதையும் தாண்டி அவர் மிகப்பெரிய நாடகக் கலைஞரும் ஆவார். செந்தாமரை அவர்கள் ஒரு மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் அவர் உயிர் பிரிந்ததாகக் கூறுவர்.

இவர் எம்.ஜி.ஆர், கலைஞர் என அனைவருடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். இப்படி இருக்க இவரின் மனைவிதான் ராசாத்தி அம்மாள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, நியூஸ் செக்கர் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம்.
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தில் நடிகர் செந்தாமரையும் அவருடன் ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தைக் காணப்படுகிறார்கள். அப்பெண்மணி ராசாத்தி அம்மாள் என்றும் அக்குழந்தை கனிமொழி என்றும் அப்புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையை அறிய, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் பரிசோதித்தோம். இதன்பின் இதனுள் இருக்கும் உண்மையை எங்களால் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது.
உண்மையில், வைரலாகும் படத்தில் செந்தாமரை அவர்களுடன் இருப்பவர் ராசாத்தி அம்மாளே கிடையாது. அப்பெண்மணியின் பெயர் கௌசல்யா செந்தாமரை ஆகும். இவர் ஒரு நடிகை ஆவார். உடன் இருக்கும் குழந்தை இவர்களின் மகள் ராஜலட்சுமி ஆவார்.

இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் “பூவே பூச்சுடவா” உட்பட பலத் தொடர்களில் நடித்து வருகிறார்.

வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி, கௌசல்யா செந்தாமரைதான் என்பதை வாசகர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக, வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணியின் புகைப்படத்தையும் கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி 
கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படம்.
கௌசல்யா செந்தாமரை அவர்கள் ஆனந்த விகடனுக்கு நேர்காணல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் இவரின் குடும்பப் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தை வைத்தே விஷமிகள் இவ்வாறு பொய்யான செய்தியைப் பரப்பியுள்ளனர் என்று நம் ஆய்வில் தெளிவாக உணர முடிகிறது.
Conclusion
நம் விரிவான ஆய்வுக்குப்பின் ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவி என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என்பதும் வைரலானப் புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவியும் நடிகையுமான கௌசல்யா செந்தாமரை அவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.
Result: False
Our Sources
Onenov.in: https://www.onenov.in/kousalya-senthamarai-actress/
Andrukandamugam: https://antrukandamugam.wordpress.com/2019/01/03/kousalya-senthamarai/
Ananda Vikadan Twitter Profile: https://twitter.com/vikatan/status/987659938901217280
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)