Fact Check
கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் உடலை வாங்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?
Claim: கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் உடலை வாங்க வேண்டாம் என்று பாதிக்கப்பட்டோரிடம் கூறினார் அண்ணாமலை.
Fact: வைரலாகும் வீடியோ ஒன்பது மாதங்களுக்கு முந்திய பழைய வீடியோவாகும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 50 பேர் இறந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் (49) உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் குற்றவாளி பிடிபடும் வரை உடலை வாங்க வேண்டாம் என்று பெண் ஒருவரிடம் அண்ணாமலை பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பாஜக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!
Fact Check/Verification
கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் உடலை வாங்க வேண்டாம் என்று பாதிக்கப்பட்டோரிடம் அண்ணாமலை கூறியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
அதில் பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகருக்கு அண்ணாமலை ஆறுதல் கூறியதாக கூறி செப்டம்பர் 01, 2023 அன்று இதே வீடியோவை பாலிமர் நியூஸ் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் நியூஸ் 18 தமிழ்நாடும் இதே வீடியோவை இதே தகவலுடன் செப்டம்பர் 02, 2023 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து இவ்வீடியோ குறித்து தேடுகையில் கடந்த வருடம் ஆகஸ்டில் திருநெல்வேலியை சார்ந்த பாஜக பிரமுகர் ஜெகன் என்பவர் கொலை செய்யப்பட்டதையும், அதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது.
வைரலாகும் வீடியோவில் தமிழ்நாடு பாஜகவின் இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா இருந்ததால் அவரது சமூக ஊடகப் பக்கங்களை ஆராய்ந்தோம். அதில் ஜெகன் உடலுக்கு அண்ணாமலை இறுதி அஞ்சலி செலுத்தியதாக கூறி செப்டம்பர் 04, 2024 அன்று வீடியோ ஒன்றை ரமேஷ் சிவா அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் பெண்மணியும் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து தேடியதில் ரமேஷ் சிவா வைரலாகும் வீடியோ 10 மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்றும், வைரலாகும் தகவல் பொய்யானது என்றும் என்று குறிப்பிட்டு மறுப்பு பதிவு ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!
Conclusion
கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் உடலை வாங்க வேண்டாம் என்று பாதிக்கப்பட்டோரிடம் அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் வீடியோ ஒன்பது மாதங்களுக்கு முந்திய பழைய வீடியோவாகும். இவ்வீடியோவுக்கும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
ஒன்பது மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகரின் குடும்பத்துடன் அண்ணாமலை பேசிய வீடியோவை திரித்தே இத்தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
Report from Polimer News, Dated September 01, 2024
Report from News 18 Tamilnadu, Dated September 02, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)