Fact Check
திருநெல்வேலி சிமெண்ட் ஆலை பகுதியில் சிங்கம் ஒன்று உலா வருவதாகப் பரவும் வீடியோ வதந்தி!
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் அமைந்திருக்கும் சிமெண்ட் ஆலை ஒன்றில் சிங்கம் ஒன்று உலாவருவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்து உலாவும் வகையிலான வீடியோக்கள் பெரும்பாலும் காடுகளுக்கு அருகில் அமைந்திருக்கும் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, சிசிடிவி கேமராக்களில் இரவு நேர நடமாட்டத்தில் சிங்கம், சிறுத்தை, யானை, புலி போன்ற விலங்குகள் காடுகளுக்கு அருகில் அமைந்திருக்கும் மக்கள் வசிப்பிடங்களில் தென்படும் வீடியோக்கள் வலைத்தளங்களில் பெரும்பான்மையாக காணக்கிடைக்கும்.
இந்நிலையில், திருநெல்வேலியில் அமைந்துள்ள சிமெண்ட் பேக்டரி பகுதியில் சிங்கம் ஒன்று வலம் வருவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. திருநெல்வேலி, கோவை, விருதுநகர், அரியலூர் என்று பல்வேறு ஊர்களின் பெயர்களில் இந்த வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
திருநெல்வேலி சிமெண்ட் ஆலை ஒன்றில் சிங்கம் உலாவுவதாகப் பரவும் வீடியோ தகவலின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து ஆராய்ந்தோம்.
அப்போது, திருநெல்வேலி மாவட்ட துணை ஆணையர் திரு.அர்ஜூன் சரவணன் இது தொடர்பான விளக்கம் ஒன்றினைத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது நமக்குத் தெரிய வந்தது. அதில் அவர், “வதந்தி பரப்பாதீர்கள். கடந்த இரு நாட்களாக திருநெல்வேலி சிமெண்ட் பாக்டரி அருகே சிங்கம் உலாவுகிறது என வாட்சப்பில் வதந்தி. இது குஜராத் மாநில சிமெண்ட் பாக்டரி. நெல்லையில் இருக்கும் ஓரே சிங்கம் “துரைசிங்கம்” மட்டுமே. எனவே நிம்மதியாக இருங்க மக்களே” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், குறிப்பிட்ட அந்த வீடியோ தொடர்பாக ரிவர்ஸ் சர்ச் முறையில் தேடியபோது கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், குஜராத் சிமெண்ட் பேக்டரி பகுதி ஒன்றில் சிங்கம் உலாவுவதாக செய்தி ஒன்று மற்றொரு வீடியோவுடன் வெளிவந்துள்ளது.

Conclusion:
திருநெல்வேலி சிமெண்ட் ஆலை ஒன்றில் சிங்கம் உலாவுவதாகப் பரவும் வீடியோ தகவல் வதந்தி என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
Arjun Saravanan:https://twitter.com/ArjunSaravanan5/status/1406816118224953347?s=20
Republic world:https://www.republicworld.com/entertainment-news/whats-viral/scary-lion-spotted-near-cement-factory-in-gujarat-netizens-amused.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)