Fact Check
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா நினைவிடம் குறித்து இப்படிக் கூறினாரா?
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அம்மா உயிருடன் இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பான நினைவிடத்தை அவரால் அமைத்திருக்க முடியாது என்று கூறியதாக செய்திப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Fact Check/Verification:
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வனத்துறை நிர்வாகத்தின் மந்திரியாகப் பதவி வகிப்பவர். அடிக்கடி சர்ச்சைப் பேச்சுகளில் சிக்கிக் கொள்வது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம்.
சமீபத்தில், மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளில் `இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள்’ என்று பேசி தங்களது ஆட்சியையே உளறிக் கொட்டி தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆனால், தற்போது அவர் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருப்பதாகக் கூறி, “அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அம்மாவின் கிருபை நிச்சயம் உண்டு” என்று அவர் பேசியதாக செய்திப்புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Archived Link: https://archive.vn/BGs4g
Archived Link: https://archive.vn/kG9OO
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்புகைப்படச் செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாகப் பரவும் கருத்து குறித்து அறிய முதலில் குறிப்பிட்ட அந்த செய்தி நிறுவனத்தின் சமூக வலைத்தளப்பக்கங்களை ஆராய்ந்தோம்.
அதில், செய்தி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் ஜனவரி 27 ஆம் தேதியன்று, அதுபோன்ற எந்தவித பதிவும் வெளியிடப்படவில்லை.
மேலும், நியூஸ் 7 செய்தி நிறுவனம் தற்போது பிரேக்கிங் செய்திகளுக்கு வேறோரு வகையிலான வடிவமைப்பை பயன்படுத்தி வருகிறது.
வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் எழுத்து வடிவம் மற்றும் புகைப்படம் அமைந்திருக்கும் பாணி நியூஸ் 7 தமிழுடையது அல்ல என்பதும் நமக்குத் தெரிய வந்தது.


ஏனெனில், உண்மையான வடிவமைப்பில் புகைப்படம் அமைந்திருக்கும் இடத்தின் கார்னர் பகுதிகள் வளைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
மேலும், இந்த செய்திப்புகைப்படம் குறித்து நியூஸ் 7 நிறுவன பத்திரிக்கையாளர்களிடம் கேட்டறிந்தபோது அதுபோன்ற எவ்வித செய்தியையும் அவர்கள் வெளியிடவில்லை; அமைச்சரும் அது போன்ற கருத்தினைக் கூறவில்லை என்பதும் நமக்குத் தெரிய வந்தது.
எனவே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாகப் பரவும் இப்புகைப்படச் செய்தி தவறானது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிய வந்தது.
Conclusion:
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா நினைவிடம் குறித்து அவர் உயிருடன் இருந்திருந்தால் கூட இப்படிப்பட்ட நினைவிடத்தை அமைத்திருக்க முடியாது என்று கூறியதாகப் பரவும் செய்திப் புகைப்படம் போலியாகச் சித்தரிக்கப்பட்டது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
News 7: https://twitter.com/news7tamil
Minister Dindigul srinivasan: https://twitter.com/Srinivasanoffl/status/1354290020857769984?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)