Fact Check
ஒபாமா ‘மோடியுடன் கைகுலுக்கியதற்கு வெட்கப்படுகிறேன்’ என ட்விட்டரில் பதிவிட்டாரா?
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ‘இவருடன் கைகுலுக்கியதற்கு இன்று நான் வெட்கப்படுகிறேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Fact Check/ Verification:
புதிதாக ஏற்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்காண விவசாயிகள், தலைநகர் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்துப் போராடி வருகின்றனர்.
போராட்டம் தொடங்கி ஏறக்குறைய 20 நாட்கள் ஆகியும், மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இசைந்து, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான எந்த ஒரு முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை.
மேலும், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தானும் பிரதமர் நரேந்திர மோடியும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘இவருடன் கைகுலுக்கியதற்கு வெட்கப்படுகிறேன்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ட்விட் பதிவிட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
முதலில், இதுகுறித்த உண்மை அறிய பாரக் ஒபாமா அவர்களின் ட்விட்டர் பக்கத்தை ஆராய்ந்து பார்த்தபோது டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து எவ்வித பதிவினையும் அவர் இடவில்லை என்பது நமக்குத் தெரிய வந்தது.
மேலும், வைரலாகும் பதிவில் தேதி, ட்விட்டரின் அதிகாரப்பூர்வ அமைப்பில் இருக்கவில்லை என்பதையும் நம்மால் கண்டறிய முடிந்தது.

தொடர்ந்து, ரிவர்ஸ் இமேஜ் தேடலில் குறிப்பிட்ட புகைப்படம் தொடர்பான செய்திகளைத் தேடியபோது அது பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2014ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது நமக்குத் தெரிய வந்தது.

மேலும், இப்புகைப்படம் குறித்த அமெரிக்காவின் இந்திய தூதரகப் பதிவினையும் நம்மால் அவர்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணமுடிந்தது.

இது தொடர்பான உண்மையறியும் சோதனையை ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் நாம் நியூஸ்செக்கர் சார்பில் செய்துள்ளோம்.
Conclusion:
எனவே, அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கைகுலுக்கியதற்கு வெட்கப்படுவதாகக் கூறி எவ்வித ட்விட்டர் பதிவையும் இடவில்லை என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் வாசகர்களுக்கு விளக்கியுள்ளோம்.
Result: Fabricated
Our Sources:
Barack Obama’s Twitter: https://twitter.com/BarackObama
Economic Times: https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-narendra-modis-us-visit-eight-highlights/articleshow/43977644.cms
Embassy of India, Washington, D.C., USA: https://www.indianembassyusa.gov.in/extra?id=21
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)