Fact Check
பிரதமர் நரேந்திர மோடி மின்னணு வாக்கு இயந்திரத்தை வணங்கியதாக வதந்தி!
பிரதமர் நரேந்திர மோடி, மின்னணு வாக்கு இயந்திரம் ஒன்றிற்கு மாலை அணிவித்து, அதனை வணங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Fact check/Verification:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும்கட்சி பாஜகவின் மீது அடிக்கடி, மின்னணு வாக்கு இயந்திரத்தினை தவறாக உபயோகித்தே வெற்றி பெறுகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கம்.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் இருந்தே இக்குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இவை நிரூபணமற்றவை என்றாலும் கூட, சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த பதிவுகளை நாம் பரவலாக பார்க்க முடியும்.
இந்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி மின்னணு வாக்கு இயந்திரத்தை வைத்து, அதற்கு மாலை மரியாதை செய்து வணங்கி நிற்பதுபோன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பார்த்து, நரேந்திர மோடி நன்றி சொல்லிப் பாடுவது போன்று அந்த புகைப்படத்துடன் கமெண்ட் ஒன்றும் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
உண்மையும் பின்னணியும்:
பிரதமர் நரேந்திர மோடி வாக்கு இயந்திரத்தை வணங்கி நிற்பது போன்று பரவும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
அவ்வாறு ஆராய்ந்ததில், அப்புகைப்படத்தில் வாக்கு இயந்திரம் போட்டோஷாப் மூலம் இணைக்கப்பட்டிருப்பதை நாம் கண்டறிந்தோம்.
உண்மையில், அப்புகைப்படத்தில் பிரதமர் மோடி இந்து மகா சபையின் தலைவரான வீர சாவர்க்கர் என்றழைக்கப்படும் விநாயக் தாமோதரின் புகைப்படத்திற்கே மலர் தூவி வணங்குகிறார். சாவர்க்கரின் 137வது பிறந்த தினத்தையொட்டி, மே 28, 2020 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பதையும் நாம் அறிந்து கொண்டோம். இந்த செய்தியை பல்வேறு முன்னணி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக, வீர சாவர்க்கரின் புகழ் பாடும் வகையில் மே 28ம் தேதியன்று பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றும் நமக்கு காணக்கிடைத்தது.
எனவே, வைரலாகும் புகைப்படத்தில் பிரதமர் மோடி வணங்கி நிற்பது வீர சாவர்க்கரின் புகைப்படத்தைத்தான் என்பது நமக்குத் தெளிவாகியுள்ளது.
Conclusion:
பிரதமர் நரேந்திர மோடி மின்னணு வாக்கு இயந்திரத்தை வணங்கி நிற்பது போன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற புகைப்படம் முற்றிலும் தவறானது என்பதையும், அவர் உண்மையில் வணங்கி நிற்பது சாவர்க்கரின் புகைப்படம் என்பதையும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விரிவாக விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் அப்புகைப்படத்தை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
Result: Misleading
Our sources:
Twitter: https://twitter.com/narendramodi/status/1265850817690492936?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)