Fact Check
பிரதமர் மோடி ஒரே நாளில் நான்கு முறை உடை மாற்றிக் கொண்டு தலைவர்களை சந்தித்தாரா?
பிரதமர் மோடி, ஒரே நாளில் வெவ்வேறு உடைகளுடன் நான்கு அரசியல் தலைவர்களை சந்தித்தார் என்பதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், கொரோனா வைரஸ் புதிய உருமாற்றத்துடன் மீண்டும் பரவ வாய்ப்புள்ளதாகவும், மூன்றாம் அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் பரவும் தகவல்கள் உவப்பானதாக இல்லை.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற ஆட்சிக்காலம் முடிவடைந்து புதிய மாநில அரசுகள் அமைந்துள்ளன. தமிழ்நாடும் அதில் ஒன்று. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மோடியைச் சந்திக்க டெல்லி சென்றுள்ளார். அதேபோன்று, பல்வேறு மாநில முதலமைச்சர்களும், முக்கிய பாஜக அரசியல் கட்சித் தலைவர்களும் பிரதமரைச் சந்தித்து வருகின்றனர். கொரோனா கால ஆலோசனை, மாநிலங்களுக்கான கோரிக்கைகள் என இதற்கான காரணங்களும் வேறுபடுகின்றன.
இச்சூழ்நிலையில், பிரதமர் மோடி தன்னை சந்திக்க வந்த தலைவர்களைச் சந்திக்க ஒரே நாளில் நான்கு முறை உடை மாற்றியதாக “நேற்று ஒரே நாளில்
பாஜக தலைவர்கள் நான்கு பேரை சந்தித்தார் மோடி..வெவ்வேறு உடை உடுத்தி. நானெல்லாம் ஒரு துறவியை போன்றவன் என்று சொன்னதும் இதே ஏழை மகன் தான்” என்கிற வாசகங்களுடன் நான்கு வெவ்வேறு புகைப்படங்கள் ஜூன் 12 ஆம் தேதி முதல் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/Verification:
பிரதமர் மோடி நான்கு வெவ்வேறு தலைவர்களை ஒரே நாளில் சந்திக்க தனித்தனி உடை மாற்றியதாகப் பரவும் புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து நாம் ஆய்வு செய்தோம்.
முதலாவதாக, குறிப்பிட்ட வைரல் புகைப்படங்களில் பகிரப்பட்டிருந்த முதல் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அசாம் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் ஹிமந்தா பீஸ்வா, பிரதமர் மோடியைச் சந்தித்த புகைப்படம் என்று ஜூன் 2 ஆம் தேதியன்று பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்திருந்தது நமக்குக் கிடைத்தது. அதில் அப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாற்றும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்த போது, இப்புகைப்படம் ஜூன் 11 ஆம் தேதியன்று பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மூன்றாவது புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, அப்புகைப்படத்தில் இருப்பது மணிப்பூர் மாநிலத்தின் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா என்பதும் அவர் பிரதமரை ஜூன் 10 ஆம் தேதி சந்தித்திருப்பதாகப் புகைப்படம் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
அதே போன்று, கடைசியாக உத்ரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் தீரத் சிங் ராவத், பிரதமர் மோடியை ஜூன் 7 ஆம் தேதியன்று சந்தித்திருப்பதும் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டுள்ளது.
எனவே, இவை அனைத்தும் ஒரே நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல என்பது இதன்மூலமாக நமக்குத் தெரியவருகிறது.
Conclusion:
பிரதமர் மோடி நான்கு வெவ்வேறு தலைவர்களை ஒரே நாளில் சந்திக்க தனித்தனி உடை மாற்றியதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
PMO India Twitter: https://twitter.com/PMOIndia
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)