Fact Check
எடப்பாடி பழனிச்சாமி, ‘பிக்பாஸ் பாக்க மாட்டேன்;ப்ரோமோ தான் பார்ப்பேன்’ என கமலுக்கு பதிலளித்தாரா?
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்கிற கமல்ஹாசனின் ட்விட்டிற்கு பதிலளிக்கும் வகையில் ‘பிக்பாஸ் பார்க்க மாட்டேன்;ப்ரோமோ தான் பார்ப்பேன்’ என்று ட்விட் போட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று பரவியது.

Fact check/Verification:
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார முன்னெடுப்புகள் இப்போதே சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் `கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து பல குடும்பங்கள் கெட்டுப் போகின்றன’ என்று கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து. அவருக்கு பதிலளிக்கும் வகையில் ‘முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் கமல்ஹாசன்.
பிரச்சினை இதுவல்ல…இனிதான் ஆரம்பம். கமல்ஹாசனின் மேற்கண்ட ட்விட்டிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து “பிக்பாஸ் பாக்க மாட்டேன்; ப்ரோமோ தான் பார்ப்பேன்” என்று பதிலளித்ததாக சமூக வலைத்தளங்களில் வைரல் புகைப்படம் ஒன்று பரவத் துவங்கியது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இப்பதிவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்பதிவுக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டதாகப் பரவும் இந்த ட்விட் புகைப்படம் குறித்து ஆராய முடிவு செய்தோம்.
குறிப்பிட்ட அந்த ட்விட்டர் பதிவு புகைப்படத்தில் டிசம்பர் 17, இரவு 08.10 என்று தேதியும் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்த்தோம்.
முதலில், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இப்படி ஏதாவது ட்விட் பகிரப்பட்டுள்ளதா என்று பார்த்தோம். ஆனால், குறிப்பிட்ட அந்த தேதியில் இரவு 7.06க்கு முதல்வரது ட்விட்டர் பக்கத்தில் கடைசி ட்விட் இடப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அடுத்த ட்விட், மறுநாள் டிசம்பர் 18ம் தேதி அன்றே பதிவிடப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் ஐடி @CMOTamilNadu ஆகும். ஆனால், பரவும் புகைப்படத்தில் @CMOTamilnadu என நாடு ஆங்கில சிறிய எழுத்தில் அமைந்துள்ளது.


தொடர்ந்து, பரவும் ட்விட் புகைப்படத்தில் இருக்கும் வாசகங்களும் பேச்சுத் தமிழில் அமைந்துள்ளன. முதல்வரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதுவரை வந்திருக்கும் அனைத்து செய்திப் பகிர்வுகளும் பேச்சுத் தமிழில் இருந்ததில்லை என்பதும் நமக்குத் தெரிய வந்தது.
எனவே, குறிப்பிட்ட அந்த ட்விட் புகைப்படம் போலியாகச் சித்தரிக்கப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகிறது.
Conclusion:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கமல்ஹாசனுக்கு பதிலளித்து, சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் போட்டதாகப் பரவும் புகைப்படம் சித்தரிக்கப்பட்டது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading/Partly False
Our Sources:
CMO TamilNadu: https://twitter.com/CMOTamilNadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)