Fact Check
பெற்றோரை இழந்து ரோட்டோரத்தில் வசித்த சிறுமிக்கு உதவினாரா உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்?
பெற்றோரை இழந்து ரோட்டோரத்தில் ஆதரவின்றி வாடிய சிறுமிக்கு உடனடியாக உணவு வழங்கி, அருகில் இருந்த மாவட்ட அதிகாரி மூலமாக நல்ல விடுதியில் சேர்த்து அவருக்கான செலவையும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்றுக் கொண்டதாக புகைப்படத் தகவல் ஒன்று வைரலாகிறது.

“பனாரஸ் பகுதியில் ஓர் இரவில் அரசு யாத்திரை நேரத்தில் ரோட்டோரத்தில் அழுதபடி நின்ற சிறுமியை கண்ட யோகிஜி அவரை சந்தித்து விபரங்கள் அறிந்தாா் ..
தாய் தந்தையர் இல்லாத அந்த சிறுமி தனது மாமாவின் ஆதரவில் ரோட்டோரத்தில் வசித்து வந்ததும் அவரும் சில நாட்களுக்கு முன்பு மரணப்பட சில சமூக விரோதிகளின் தொல்லைகளை சந்திக்க நோ்ந்ததையும் அவரால் அறிய முடிந்தது ..
உடனடியாக உணவு ஏற்பாடு செய்து சிறுமிக்கு வழங்கியதோடு தனது அருகில் இருந்த மாவட்ட அதிகாரியிடம் அருகில் உள்ள நல்ல ஹாஸ்டல் ஒன்றில் சிறுமியை சோ்த்து விடவும் சிறுமியின் படிப்பு முதல் சொந்த காலில் நிற்கும் வரை உள்ள செலவுகளை தனது சொந்த கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார் ..
மக்கள் சேவையே மாதவ சேவை ..தேசபற்று இந்து தா்ம பற்று ஆளுமை திறன் கருணை உள்ளம் கொண்ட யோகிஜீயை உத்திரபிரதேச மக்கள் தனது குடும்பத்தில் ஒருவராக காணும் நிலை அதிகமாகி வருகிறது ..ஜெய்ஹிந்த்” என்கிற வாசகங்களுடன் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறுமி ஒருவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
பெற்றோரை இழந்து ரோட்டோரத்தில் ஆதரவின்றி வசித்த சிறுமிக்கு உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உதவியதாக பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அப்போது, குறிப்பிட்ட அப்புகைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு, வந்தாகியா பகுதி குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடியபோது எடுத்த புகைப்படம் என்று லைவ் ஹிந்துஸ்தான் செய்தி வெளியிட்டிருந்தது நமக்குக் கிடைத்தது.

மேலும், இது தொடர்பான மற்றொரு புகைப்படமும் நமக்கு ட்விட்டர் மூலமாகக் கிடைத்தது.

தொடர்ந்து, யோகி ஆதித்யநாத் பெற்றோரை இழந்த ஏதேனும் வேறொரு சிறுமிக்கு இதுபோன்று உதவியைச் செய்துள்ளாரா என்று தேடியபோது அது தொடர்பான எவ்வித தரவுகளும் அதிகாரப்பூர்வமாக அவரது சமூக வலைத்தளப்பக்கங்களிலோ, செய்திகளிலோ வெளியாகவில்லை என்பது உறுதியானது.
எனவே, குறிப்பிட்ட அந்தப் புகைப்படம் 2019ம் ஆண்டு, யோகி ஆதித்யநாத் வந்தாகியா பகுதியில் தீபாவளி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது நமக்கு உறுதியாகியது.
Conclusion:
பெற்றோரை இழந்து ரோட்டோரத்தில் ஆதரவின்றி வசித்த சிறுமிக்கு உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உதவியதாக பரவும் புகைப்படம் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Twitter: https://twitter.com/official_xeto/status/1188429503694962688?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)