Fact Check
அயோத்தி ரயில் நிலையம் என்று வைரலாகும் காந்தி நகர் வீடியோ!
அயோத்தி ரயில் நிலையம் என்று கூறி ரயில் நிலையம் ஒன்றின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, அங்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அயோத்தியை சர்வதேச ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற, பல கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அயோத்தி ரயில் நிலையம் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. அவ்வீடியோவில் காணப்படும் ரயில்நிலயத்தில் அழகான வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததா?
Fact Check/Verification
அயோத்தி ரயில் நிலையம் என்று வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய, அவ்வீடியோவை உற்று நோக்கினோம். அதில் 0.33 வினாடியில், சுவற்றில் குஜராத் சுற்றுலாத்துறையின் அடையாளச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது.


அதேபோல் வீடியோவின் 0.52 வினாடியில் பிரமிடு போன்ற தோற்றம் உடைய கட்டிடம் ஒன்றைக் காண முடிந்தது. இந்தக் கட்டிடம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள காந்தி மந்திரின் தோற்றத்தை ஒத்திருந்தது. காந்தி மந்திர் காந்தி நகர் ரயில் நிலையத்தின் அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்பின் வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சிகளை ஒவ்வொரு ஃபிரேமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் வைரலாகும் வீடியோ குஜராத் மாநிலம் காந்திநகரில் எடுக்கப்பட்டதென்று கூறி சிலர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றி இருப்பதை காண முடிந்தது.

நம் தேடலில் யூடியூபில் The MRC எனும் சேனலில் காந்தி நகர் ரயில் நிலையம் வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்ததை காண முடிந்தது. அதில் காந்தி மந்திரும், காந்தி நகர் ரயில் நிலையமும் அருகருகில் இருப்பதையும், காந்தி நகர் ரயில் நிலையத்தின் வெளிப்புறத் தோற்றத்தில் வைரலாகும் வீடியோவில் இருப்பதுபோல் ஒவியங்கள் காணப்படுவதையும் நம்மால் காண முடிந்தது.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது வைரலாகும் வீடியோ உத்திரப்பிரதேசத்தின் அயோத்தியில் எடுக்கப்பட்டதல்ல, அது குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு தெளிவாகியது.
நியூஸ்செக்கர் இந்தியிலும் இந்த வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதை இங்கே படிக்கலாம்.
Also Read: கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்; வைரலாகும் புதிய தலைமுறை நியூஸ்கார்ட் உண்மையானதா?
Conclusion
சமூக வலைத்தளங்களில் அயோத்தி ரயில் நிலையம் என்று கூறி பரப்பப்படும் வீடியோவானது, உண்மையில் அயோத்தியில் எடுக்கப்பட்டதல்ல, அது குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook: https://www.facebook.com/itarunjbarot/videos/107571148163118
YouTube: https://www.youtube.com/watch?v=6inO0dOoaoI
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)