Fact Check
தளர்வுகள் அற்ற ஊரடங்கை முன்னிட்டு தென்காசியில் விற்றுத் தீர்ந்ததா பஜ்ஜி போண்டா மாவு?
தளர்வுகள் அற்ற ஊரடங்கை முன்னிட்டு தென்காசியில் பஜ்ஜி மற்றும் போண்டா செய்ய உபயோகிக்கப்படும் மாவு பாக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து முழு ஊரடங்குக்குப் பிறகாக இன்றிலிருந்து தளர்வுகள் அற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இறப்பு போன்ற அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற எதற்காகவும் மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமை மற்றும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இருநாட்களும் அனைத்து கடைகளும் முழுவதுமாக திறந்திருந்தன. அதனால், மாநிலம் முழுவதும் மக்கள் கூட்டம் வெள்ளமென அலை மோதியது.
இந்நிலையில், தென்காசியில் குற்றால சீசன் துவங்கி மழையால் குளிர்ச்சியாகி உள்ளதால் பஜ்ஜி போண்டா மாவு பாக்கெட்டுகள் அனைத்தும் தளர்வுகள் அற்ற ஊரடங்கைக் கருத்தில் கொண்டு விற்றுத் தீர்ந்துவிட்டதாக செய்திப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
தளர்வுகள் அற்ற ஊரடங்கை முன்னிட்டு தென்காசியில் பஜ்ஜி மற்றும் போண்டா செய்ய உபயோகிக்கப்படும் மாவு பாக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாகப் பரவிய செய்திப் புகைப்படமானது நியூஸ் 7 செய்தித்தொலைக்காட்சி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு போன்று பரவியது.
இதுகுறித்த உண்மையறிய, நியூஸ் 7 தமிழின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தை ஆராய்ந்தோம். அதில் அவர்கள், பரவும் குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு போலியாக வடிவமைக்கப்பட்டது என்கிற செய்தியைப் பகிர்ந்துள்ளனர்.
“இந்த செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை!” என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிருபர்கள் சிலரும் உறுதி செய்தனர்.
ஊரடங்கு காலத்தில் கூட்டமாக வெளியில் செல்லும் மக்களையும், மக்களை உணவுப் பிரியர்களாக மாற்றி வருகின்ற லாக்டவுன் நேரத்தையும் கிண்டல் செய்யும் வகையில் இப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
Conclusion:
தளர்வுகள் அற்ற ஊரடங்கை முன்னிட்டு தென்காசியில் பஜ்ஜி மற்றும் போண்டா செய்ய உபயோகிக்கப்படும் மாவு பாக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாகப் பரவிய செய்தி தவறானது. இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Satire
Our Sources:
News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1396417318876446725
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)