Fact Check
புரெவி புயலின் அர்த்தம் குதிரை வேகப் புயல் என்பதா?
வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் பெயரானது ‘குதிரை’ என்று அர்த்தம் கொண்டது என சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது.

Fact check/Verification:
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ‘புரெவி’ புயல், இலங்கைக்கு அருகே திரிகோணமலை வடக்குப் பகுதி மற்றும் பாம்பன் என இரு இடங்களில் கரையைக் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தென் தமிழகப் பகுதிகளில் அதீத கனமழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம், புரெவி புயலானது பாம்பனில் இருந்து 530 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில், புரெவி புயலின் பெயர்க்காரணம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புரெவி என்றால் குதிரை என்பதாக அந்த தகவல் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
உண்மையும் பின்னணியும்:
புரெவி புயல் பெயர் குறித்துப் பரவும் இத்தகவல் குறித்து ஆராய, முதலில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் செய்தியை ஆராய்ந்தோம்.
அப்போது, ஆங்கிலத்தில் இந்தப் புயலானது ‘Burevi’ என்று குறிப்பிடப்படுவது தெரிய வந்தது.
மேலும், குதிரையைக் குறிக்கும் தமிழ்ச்சொல் ‘புரவி’ என்பதையும் நாம் அறிந்திருந்ததால், ஆங்கிலத்தில் அது `puravi’ என்று தமிழை ஆங்கிலப்படுத்தியோ, ‘Horse’ என்கிற ஆங்கில வார்த்தையிலோ குறிப்பிடப்படவில்லை என்பதையும் அறிந்தோம்.
மேலும், Burevi என்கிற ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை ஆராய்ந்தபோது, அது மாலத்தீவின் தேசிய மொழியான திவேஹி மொழியைச் சேர்ந்த வார்த்தை என்பதையும், தீப்பரத்தை எனப்படும் ஒரு வகை சதுப்புநிலத் தாவரத்தின் பெயர் அது என்பதையும் நம்மால் கண்டறிய முடிந்தது.

இதனுடைய பொதுப்பெயர், ‘கறுப்பு சதுப்புநிலம்’ என்பதாகும். இவை ‘Lumnitzera racemosa Willd’ என்கிற தாவரவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. தாவரவியல் சார்ந்த இணையத்தளங்கள் மூலமாக இவற்றை அறிய முடிந்தது.
https://indiabiodiversity.org/species/show/230310
https://groups.google.com/g/indiantreepix/c/xoA7-qDE0VM/m/BL0JPGpIAAAJ
https://www.fao.org/3/ai387e/AI387E06.htm
மேலும், சமூக வலைத்தளங்களிலும் சில முன்னணி ஊடகங்களிலும் இந்த பெயர் குறித்த சரியான விளக்கம் வெளிவந்துள்ளதை நாம் காண முடிந்தது. அதற்கான வலைத்தள இணைப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்.
புயல்களுக்கு பெயரிடுவதற்கான சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாடுகள் அடிப்படையில், மாலத்தீவு அளித்த பெயரே ‘புரெவி’ என்பதாகும். அதற்கான சமூகவலைத்தள இணைப்பையும் இங்கே அளித்துள்ளோம்.
Conclusion:
எனவே, தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள ‘புரெவி’ புயலின் பெயர் தாவரத்தைக் குறிக்கிறது என்பதையும், புரவி என்கிற குதிரையைக் குறிக்கவில்லை என்பதையும் நியூஸ்செக்கர் தமிழ் மூலமாக எடுத்துக் காட்டியுள்ளோம்.
ஆகையால், குதிரைப்புயல் என்று பரவும் சமூகவலைத்தளத் தகவல் தவறானது என்பதையும், புரெவி புயலின் பெயருக்கும் குதிரைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் வாசகர்களுக்கு விளக்கியுள்ளோம்.
Result: False
Our Sources:
Twitter Links: https://twitter.com/weatherindia/status/1334016751613272064?s=20 https://twitter.com/MRK_POLLACHI/status/1332708644119429122?s=20
Dinamalar: https://www.dinamalar.com/news_detail.asp?id=2660661
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)