Fact Check
தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் உருவாகிறதா?
தமிழகத்தில் நிவர், புரெவி புயலைத் தொடர்ந்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் வரிசையாக வரவிருப்பதாக செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Fact check/Verification:
வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல்களால் தமிழகமே மழை வெள்ளத்தில் மூழ்கியது. காற்றும் மழையும் இணைந்து சென்னை மட்டுமின்றி தமிழகத்தையே ஒரு ஆட்டு ஆட்டிவைத்தது.
இந்நிலையில், தமிழகமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் துவங்கியுள்ள நிலையில் தொடர்ந்து தமிழகத்தை தாக்க ஐந்து புயல்கள் வரிசை கட்டி நிற்பதாகவும் தகவல் ஒன்று வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இச்செய்தி வைரலாகப் பரவி வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் டெளக்டாவ் என்னும் புயல் டிசம்பர் 8 ஆம் தேதியும், டிசம்பர் 17 ஆம் தேதி யாஸ் புயலும், 24 ஆம் தேதியன்று குலாப் புயலும், ஜனவரி 1, 2021 ஆம் ஆண்டு ஷாஹீன் புயலும், ஜனவரி 8ம் தேதியன்று ஜவாத் என்னும் புயலும் உருவாக உள்ளதாக தெரிவிக்கிறது அச்செய்தி.
பலரும் பகிர்ந்து வருகின்ற இந்த புயல்கள் குறித்த தகவல் உண்மையானதா? தமிழகத்திற்கு அடுத்தடுத்து ஆபத்து காத்திருக்கிறதா? என்பதன் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
தமிழகத்தில் அடுத்தடுத்து வரிசையாக ஐந்து புயல்கள் தாக்கவிருக்கிறது என்கிற செய்தி காட்டுத்தீ போன்று பரவியதைத் தொடர்ந்து அச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அச்செய்தி குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில், தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் செய்தி நமக்கு சமூக வலைத்தளத்தில் இருந்து கிடைத்தது.
அதன்படி அவர், “வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி மூலம் பரவும் இத்தகைய போலிச்செய்திகளையும் வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், புயல்களுக்கு ஒவ்வொரு வருடமும் 13 நாடுகள் இணைந்து பெயர் பட்டியை ஒவ்வொரு வருடமும் வெளியிடுகின்றனர். அதனடிப்படையில், 13 உறுப்பு நாடுகளுக்கு 13 புயல் பெயர்கள் என 169 புயல் பெயர்கள் அடங்கிய பட்டியலை உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஆனால், வைரலாகும் செய்தியில் குறிப்பிடப்படும் புயல் பெயர்கள் இப்பட்டியலில் இருந்தாலும் கூட தேசிய வானிலை ஆய்வு மையமோ அல்லது வானிலை ஆராய்ச்சியாளர்களோ தற்போது பரவி வருகின்ற செய்தி போன்று புயல்கள் எங்கே உருவாரும்? எங்கே கரையைக் கடக்கும்? எங்கே மையம் கொள்ளும் என்பதற்கான எவ்வித தகவலையும் அதிகாரப்பூர்வமாக பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்களின் தாக்கம் என்று பரவிய செய்தி முற்றிலும் தவறானதாகும்.
Conclusion:
நிவர், புரெவி புயல்களைத் தொடர்ந்து தமிழகத்தை டிசம்பர், ஜனவரி மாதத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் தாக்கவிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்பதை நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
வாசகர்கள் யாரும் ஆதாரப்பூர்வ அறிவிப்பின்றி இப்புயல்கள் குறித்த செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Result: Fabricated
Our Sources:
Twitter: https://twitter.com/praddy06/status/1335958168006889473?s=20
The Weather Channel: https://weather.com/en-IN/india/news/news/2020-04-30-imd-releases-new-list-cyclone-names-over-north-indian-ocean
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)